திருகோணமலை கன்னியா மாங்காயூற்று பகுதியில் போக்குவரத்திற்கு என விடப்பட்டுள்ள பேரூந்துகள் சரியான நேரத்திற்கு கடமைகளை சரிவரச் செய்வதில்லை எனவும், அதிகாரிகள் அசமந்தப்போக்குடன் செயற்படுகிறார்கள் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் இது தொடர்பிலான விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
கன்னியா மாங்காயூற்று பகுதிக்கு காலை 6.45 மணிக்கு வரவேண்டிய பேரூந்து குறித்த பகுதிக்கு சேவைக்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளிகள் என பலர் பாரிய சிரமங்களிற்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதேசவாசிகள், காலையில் பாடசாலைக்கு எதிர்பார்த்திருந்த மாணவர்கள் இன்று பாரிய சிரமத்தை எதிர்நோக்கியதாகவும், இதனால் பாடசாலைக்கு செல்வதற்கு தாமதமாகியதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்தல் கொடுத்த போதிலும், அதிகாரிகள் உரிய பதிலளிக்காமல் அசமந்தப்போக்குடன் பதிலளித்ததாகவும், அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், திருகோணமலை போக்குவரத்து சபை அதிகாரிகள் தீர்வினை பெற்றுத்தரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.