திருகோணமலை பொது வைத்தியசாலையில் நிரந்தரமாக பல் அடைக்கும் மருந்து மூன்று மாதங்களாக இல்லாமையினால் தூர இடங்களிலிருந்து வரும் நோயாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை மாவட்ட மக்கள் அனைத்து சேவைகளையும் ஒரே தடவையில் பெறக்கூடிய வைத்தியசாலையாக திருகோணமலை பொது வைத்தியசாலை காணப்படுகின்றது.
குறிப்பாக மூதூர் தள வைத்தியசாலை, புல்மோட்டை மற்றும் கிண்ணியா தள வைத்தியசாலைகளில் பல் வைத்தியர்கள் இருந்தபோதிலும் பல் பிடுங்குவதற்கு வசதிகள் காணப்படுகின்ற போதிலும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் மாத்திரமே நிரந்தரமாக பல் அடைக்கும் இயந்திரம் காணப்படுவதாகவும் அதற்குரிய மருந்துகள் மூன்று மாதங்களாக இல்லாமையினால் பல் கட்டும் நோயாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக குற்றம் சுமத்துகின்றனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலை கிழக்குமாகாண சபைக்கு கீழ் இயங்கி வந்த போதிலும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை எனவும், தற்பொழுது மத்திய அரசாங்கத்துக்கு இயங்கி வருகின்ற போதிலும் வைத்தியசாலையில் பல குறைபாடுகளும், மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
குறிப்பாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைபாடுகள் பற்றி மத்திய சுகாதார அமைச்சுக்கோ, சுகாதார அமைச்சருக்கோ, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரியப்படுத்துவது இல்லையெனவும் இதனாலேயே இவ்வாறான கட்டுப்பாடுகள் ஏற்படுவதாகவும் நோயாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆகவே நோயாளிகளின் நலன் கருதி திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு தேவைப்படுகின்ற இயந்திரங்கள் மற்றும் மருந்து வகைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சும் , பாராளுமன்ற உறுப்பினர்களும் கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் நோயாளர்கள் கோரிக்கை விடுகின்றனர்.