திருகோணமலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான சிறைச்சாலை ஜெயிலரை எதிர்வரும் 8ஆம் மாதம் 2ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (19) குறித்த சந்தேக நபரை ஆஜர்படுத்திய போதே கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து அவர்கள் போதை பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்து ஜெயிலர் சென்ற மோட்டார் சைக்கிளை சோதனையிட்டபோது அவரிடம் இரந்து 14 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-மட்கோ,மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த ஏ.துலாஜ் மதுசங்க (30வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஜெயிலர் திருகோணமலை சிறைச்சாலையில் கடமையாற்றி வருபவர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த போதே இக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.