திருகோணமலை மாவட்டத்திற்கு குறுகிய காலத்தில் காலாவதியாகக்கூடிய நிலையிலுள்ள மருந்துப்பொருட்களும், மற்றும் தரம் குறைந்த மருந்து பொருட்களும் சுகாதார அமைச்சினாலும் அமைச்சராலும் வழங்கப்படுவதாக சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டு திருகோணமலைக்கான மருத்துவ உத்தியோகத்தர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான ஊடக சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை அரச மருத்துவ உத்தியோகத்தர் சங்கத்தின் திருகொணமலை கிளையினால் நடத்தப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய மருத்துவ உத்தியோகத்தர்கள், திருகோணமலை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு தரம் குறைந்த மருந்துப் பொருட்களையும், குறைந்த காலத்தில் காலாவதியாகக் கூடிய மருந்துப் பொருட்களையும் வழங்குவதாக தெரிவித்துள்ள மருத்துவ உத்தியோகத்தர்கள், இதற்கான தீர்வினை உடனடியாக வழங்காவிட்டால் தாம் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அத்துடன், அதி தீவரமான நோய்களுக்கு வழங்கப்படுகின்ற மருந்துகளை குறைந்தளவில் வழங்குவதாக தெரிவித்ததுடன், வைத்தியர்கள் போதியளவில் இருக்கின்ற போதும் மருந்து குறைபாடுகளால் மக்களுக்கு சிறந்த சேவையை தம்மால் வழங்க முடியாதுள்ளதாக அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, திருகோணமலை வைத்தியர் சங்கத்தினால் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகள் சுகாதார அமைச்சின் செயலாளரினால் அகற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கு தாம் கண்டணம் தெரிவிப்பதாகவும் மருத்துவ உத்தியோகத்தர் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
