அண்மையில் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழி முதன்மையாக இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய ஐக்கியம் சம்பந்தமான தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், யாழ்ப்பான விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகை தொடர்பில் சில அரசியல்வாதிகள் பாரிய பிரச்சினைகளை எழுப்பியுள்ளதாகவும், இதன்மூலம் அவர்களின் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பதாகவும் கூறினார்.
எவ்வாறாயினும் விமான நிலையத்தின் பெயர்ப் பலகையில் முதலில் தமிழ் எழுத்துக்கள் இருப்பதை கண்டு தொதிக்கும் ராஜபக்ஷக்களுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண அலுவலகத்தின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதலில் எழுதப்பட்டிருப்பது மறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், வ்வாறு மிகவும் கீழ்த்தரமான முறையில் இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளிடம் தேசிய ஐக்கியத்தையோ தேசிய பாதுகாப்பையோ எதிர்பார்க்க முடியுமா என்றும் அநுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.