சிங்கள அரசியல்வாதிகள் தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருவதால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தனது கோரிக்கையை ஏற்று எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் சரியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் மாறாக தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை தான் பறித்தெடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
முடிந்தால் எதிர்வரும் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்க தயார் என தெரிவித்துள்ள அவர், தேர்தலை புறக்கணிக்குமாறு தான் கேட்பது சர்வாதிகாரமாக அமையாது எனவும் தெரிவித்தார்.
தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் கடந்த நான்கரை வருடங்களில் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை என்பதால் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் தெளிவானதும், காத்திரமானதுமான முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.