கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றதே ஒழிய தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தை மறந்து விட்டதென வடக்கு மாகாணத்தின் முன்னாள் அமைச்சரான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.சுழிபுரத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனந்தி சசிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “கூட்டமைப்பினர் குறித்து நாமல், பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.
ஆனால் அவர் கூட்டமைப்பினரைக் குற்றஞ்சாட்டுவதற்கு முன்னர் தாங்கள் தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகளையும் கொடுமைகளையும் தமிழ் மக்கள் மறந்துவிடவில்லை என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். அந்த உண்மைகள் வெளிக் கொண்டவரப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும்.
ஆகவே நிலைமைகள் இவ்வாறிருக்கின்ற போது, நாமலின் கருத்தை தர்க்க ரீதியாகவேனும் மறுக்க முடியாதவர்களாக கூட்டமைப்பினர் இருக்கின்றனர். உண்மையில் அவரின் கருத்துக்களுக்கு பதிலடியை வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு பதிலடி வழங்கினால் கூட்டமைப்பினரின் இன்னும் பல விடயங்கள் வெளி வந்துவிடுமோ என்ற அச்சத்தால் அவர்கள் பதிலளிக்கவில்லையோ தெரியாது.
நாமலின் கருத்துக்கு கூட்டமைப்பினர் பதிலளிக்காதது தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்பதியை ஏற்படுத்தியிருக்கின்றது.
அதிலும் குறிப்பாக மூத்த அரசியல்வாதியான மாவை சேனாதிராசா இதற்குரிய பதிலை உடனடியாக வழங்கியிருக்க வேண்டும். உண்மையான சரியான தகவல்களை பொறுப்புக் கூற வேண்டியவர்கள் வழங்க வேண்டியது தான் பொருத்தமானதாக இருந்திருக்கும்
இதேவேளை ஐ.நாவில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஐபக்ஷவை, மின்சாரக் கதிரையில் இருந்து, தானே பாதுகாத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுகிறார்.
மஹிந்தவை பாதுகாத்த பிரதமரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதுகாத்து வருவது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு இவர்கள் மூவரும் மாறி மாறி பாதுகாத்த போதும் உண்மையில் கூட்டமைப்பினரை நம்பி வாக்களித்த மக்கள்தான் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்.
மேலும் தமிழ் மக்களுக்கு எதிராக எத்தனையே நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி செய்திருந்தது. ஆனால் அந்தக் கட்சிக்கே கூட்டமைப்பினர் தொடர்ந்தும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.
கடந்த காலங்களில் நல்லாட்சி என்றும் அதன் பின்னர் தீர்விற்காக தேவை என்றும் ஆதரவை வழங்குவதாக கூறினர். ஆனால் இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களுக்கு தீர்வும் இல்லை. பிரச்சனைகள் பலவும் தீர்க்கப்படவும் இல்லை.
இவ்வாறான நிலையில் வரவுள்ள ஐனாதிபதித் தேர்தலிலும் தமிழரசுக் கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை ஆதரிக்க போவதாக சொல்வதென்பது கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்களை பாதுகாத்து, அவர்களது பிரச்சனைகளைத் தீர்ப்பதை விடவும் ஐக்கிய தேசியக் கட்சியை வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனரா? என்ற கேள்வி எழுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.