ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான பாலித தெவரபெருமவிற்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
மத்துகம நீதிவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை இன்று விதித்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத நிலப்பகுதியில் சடலம் ஒன்றை புதைத்த குற்றச்சாட்டிற்காகவே அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்துகம பிரதேசத்தில் உள்ள தோட்டமொன்றில், பல வருடங்களாக உழைத்த தமிழ் முதியவர் ஒருவரின் சடலத்தை தோட்டத்திலுள்ள மயானத்தில் அடங்கம் செய்ய, தோட்ட உரிமையாளர் அனுமதி வழங்க மறுத்திருந்தார். அத்துடன் உரிமையாளரினால் நீதிமன்ற தடை உத்தரவும் பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக பிரதேச மக்கள் பிரதியமைச்சர் பாலித தெவரபெருமவிடம் முறையிட்டிருந்தனர். இதனையடுத்து அதிரடியாக செயற்பட்ட பாலித தெவரபெரும, தடையை மீறி சடலத்தை அடக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இது தொடர்பிலான குற்றச்சாட்டினை தொடர்ந்து மத்துகம நீதவான் நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெரும மற்றும் நான்கு பேரும் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்படுத்தப்பட்டமையை தொடர்ந்து எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.