இந்தோனேசியாவின் தலைநகரம் ஜகார்த்தாவிலிருந்து போர்னியோவுக்கு மாற்றப்படும் என்று ஜனாதிபதி ஜொகோ விடோடோ உறுதிப்படுத்தியுள்ளார்.
எங்கள் நாட்டின் தலைநகரம் போர்னியோ தீவுக்கு நகரும் என்றும் இந்த இடம் மத்திய கலிமந்தன், கிழக்கு கலிமந்தன் அல்லது தெற்கு கலிமந்தனில் அமையலாம் என்று ஜொகோ விடோடோ தனது ருவிற்றரில் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்த அனைத்து அம்சங்களும் ஆழமாக ஆய்வு செய்யப்படுகின்றன. இது எங்கள் நாட்டின் எதிர்காலம் பற்றிய சரியான முடிவு. அடுத்த 10, 50, 100 ஆண்டுகளுக்கு தேசத்திற்கும் மாநிலத்திற்கும் இம்முடிவினால் நன்மை கிடைக்கும் என்றும் விடோடோ கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்துள்ளது. இந்தோனேசியாவின் முதலாவது ஜனாதிபதி சுகர்னோவின் காலத்திலிருந்து தலைநகரை நகர்த்துவதற்கான யோசனை பரிந்துரைக்கப்பட்டது.
10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தலைநகர் ஜகார்த்தாவில் போக்குவரத்துச் செய்வதால் மிகவும் நெரிசலான நகரமாக ஜகார்த்தா உள்ளதால் தலைநகரை இடமாற்றம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.