தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்..
எனினும், 36 வயதான டேல் ஸ்டெயின், ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் தென்னாபிரிக்க அணிக்காக தொடர்ந்தும் விளையாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது ஒய்வுக் குறித்து கருத்து தெரிவித்த ஸ்டெயின், “நான் மிகவும் விரும்பி விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இம்முடிவு எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. கிரிக்கெட்டில் டெஸ்ட் தான் மிகச் சிறந்தது. இதில் தான் உடலளவிலும், மனதளவிலும், திறனளவிலும் மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கும்.
மேலும், சில காலம் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று விரும்பியதால் இம்முடிவை எடுத்துள்ளேன். இதன்மூலம் ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்த முடியும். எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து தென்னாபிரிக்க அணிக்காக விளையாட விரும்புகிறேன்’ என கூறியுள்ளார்.
இதேவேளை, ஸ்டெயினின் ஓய்வுக் குறித்து தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் தலைவர் தபாங் கூறுகையில், “டேல் ஸ்டெயின் மிகவும் சிறப்பான பந்துவீச்சாளர். அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் மைக்கேல் வாகனை ஆட்டமிழக்க செய்தது முதல் தற்போது வரை சிறப்பாகவே பந்துவீசி வந்தார். இவர் தென்பாபிரிக்காவின் பந்துவீச்சில் முக்கியமான ஒரு நபராக இருந்தார். இவர் இனி வரும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னோடியாக திகழ்வார்” எனக் கூறியுள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ஸ்டெயின், இதுவரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
22.95 சராசரியுடன் மொத்தம் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய தென்னாபிரிக்க பந்துவீச்சாளராக முதலிடத்தில் உள்ளார்.
ஒரு டெஸ்ட் போட்டியில் 60 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளைச் சாய்த்ததும், ஒரு இன்னிங்ஸில் 51 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அவரது சிறந்த பந்துவீச்சாகும். 26 முறை 5 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியுள்ளார்.
மேலும், சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இவர் 8ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடததக்கது.