அமைச்சர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இருப்பதே ஜனாதிபதியாவதற்கு மிகப் பெரிய தகுதியென அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் கூறியுள்ளதாவது, “பல்கலைக்கழகமொன்றில் பெற்றுக் கொள்ளும் பட்டத்தை விடவும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து அடைந்து கொள்ளும் அனுபவம் பெறுமதி மிக்கது.
அந்தவகையில் சஜித் பிரேமதாச கடந்த 20 வருடங்களாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருப்பதானது அவர் ஜனாதிபதியாவதற்கு மிகப் பெரிய தகுதியாகும்.
சஜித் பிரேமதாச இங்கிலாந்திலுள்ள லன்டண் ஸ்கூல் ஒப் எகொனொமிக்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டமொன்றைப் பெற்றுள்ளார். மேலும் நாம் நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்ளும் அறிவை பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொள்ள முடியாது.
அத்துடன் கூட்டணி அமைத்து விட்டு ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானிப்போம் என்று ஒருசிலர் கூறுகின்றர். அதேபோன்று மற்றொரு பிரிவினர், ஜனாதிபதி வேட்பாளரை நியமித்த பின்னர் கூட்டணி அமைப்போம் என்கின்றனர்.
எதுஎவ்வாறாயினும் இந்த வார இறுதியிலேயே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படுமென நான் நினைக்கின்றேன்.
ஆனால் ஒருசிலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். தற்போது எம்முடன் இருக்கும் கட்சிகள் மாறிவிடும் என்று எண்ணுகின்றனர்.
அவ்வாறு ஒருபோதும் இடம்பெறாது அவர்கள் எம்முடனே இருப்பார்கள். யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை” என லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.