ஜனாதிபதியாவதற்கு தனக்கு அதிர்ஷ்டமில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமாக பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கிங்ஸ்பரி ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கடுமையானவர் இல்லை எனவும், இதனால் அவரைக் கண்டு பயப்படத் தேவையில்லை எனவும் கூறினார்.
கோட்டாபய ஒரு சர்வாதிகார தலைவராக இருக்க மாட்டார் என்று என்னால் உறுதியளிக்க முடியும். அதுபோன்ற ஒரு தலைவருக்காக எங்கள் கட்சி செயல்படாது. அவர் நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் ஒருவர், அவர் ஒரு நல்ல ஜனநாயகவாதியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாட்டில் கலந்துகொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்றும் கட்சிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.