பரதநாட்டியம் மற்றும் இசையை போற்றி வளர்க்கும் பொருட்டு ருக்மிணி தேவி அருண்டேலினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கவின் கல்லூரிதான் கலாக்ஷேத்திரா.
ஒரே ஒரு மாணவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கலைக் கல்லூரியில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் உலகெங்கிலும் இருந்து இங்கு தங்கி கலை பயில்கின்றார்கள்.
அருண்டேலின் வழிகாட்டலே கலாக்ஷேத்திராவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. இந்த கல்லூரி 1936-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே திகதியில் ருக்மிணி தேவி அருண்டேல் மற்றும் அவரது கணவர் ஜோர்ஜ் அருண்டேல் ஆகியோரால் சென்னையில் அடையாறில் பிரம்மஞான சபையின் தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
கலாசேத்திராவின் முன்னேற்றத்திற்கு அன்னிபெசன்ட் அம்மையார், டாக்டர் ஜோர்ஜ் அருண் பேடல், டாக்டர் சி.பி.இராமசுவாமி ஐயர், ஸ்ரீசுப்பிரமணிய சாஸ்திரி போன்ற பெரியோர் உறுதுணையாக இருந்தனர். பரதநாட்டியம், கதகளி, வாய்ப்பாட்டு, வாத்திய இசை ஆகிய கவின் கலைகளில் நான்காண்டு படிப்பை முடிப்பவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படுகிறது. இங்கு பொதுக் கல்வியும் வழங்கப்படுகிறது. தவிர, தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் சிறப்பு பாடங்களாக போதிக்கப்படுகின்றன.