மனிதன் தனது அறிவுக்கூர்மையால் எவ்வளவோ சாதித்தாலும், இயற்கை ஒரு சிலுப்பு சிலுப்பினாலே நிலைகுலைந்துபோகும் சூழல் இன்றுவரை நீடிக்கிறது. இதோ, தற்போது மணல் புயல் தனது விளையாட்டைக் காட்டியதில் உலக வர்த்தகமே ஸ்தம்பித்துள்ளது. நம் அறிவுக்கூர்மையின் அடையாளமாக அமைந்திருப்பது சூயஸ் கால்வாய்.
மத்திய தரைக்கடற்பரப்பையும், செங்கடலையும் இணைக்கக்கூடிய சுமார் 196 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சூயஸ் கால்வாய், முழுக்கமுழுக்க மனித உழைப்பால் உருவாக்கப்பட்டது. தினசரி உலக வர்த்தகத்தில் 12% இதன்வழியாகத்தான் நடந்துவருகிறது. இந்த கால்வாயில் நாளொன்றுக்கு 50 கப்பல்கள்வரை பயணிக்கின்றன.
இந்த கால்வாய் இல்லையென்றால் ஆப்பிரிக்காவையே ஒரு சுற்று சுற்றித்தான் கப்பல்கள் பயணிக்க வேண்டியிருக்கும். அத்தகைய பயண நேரத்தை வெகுவாகக் குறைப்பதால் இக்கால்வாய், வர்த்தக உலகில் முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த செவ்வாயன்று காலையில், தைவான் நாட்டைச்சேர்ந்த எவர்கிரீன் என்ற பிரமாண்டமான வர்த்தகக்கப்பல் (220,000 மெட்ரிக் டன் எடை, 1,312 அடி நீளம்) இந்த கால்வாயைக் கடந்துகொண்டிருந்தபோது பலமான மணல் புயல் வீசியிருக்கிறது. இந்த மணல் புயல் குறித்தெல்லாம் ராணி காமிக்ஸில்தான் படித்திருக்கிறேன்.
மணல் புயலின் கடுமையால் கப்பலின் கேப்டனுக்கு திசையைக் கவனிக்கவே முடியாமல் போயிருக்கிறது. எனவே கப்பல் நேராகச் செல்லாமல் திசை திரும்ப, இப்போது, 900 அடி அகலமுள்ள அந்த கால்வாயின் கிழக்கு, மேற்குக் கரைகளை முட்டிக்கொண்டு நிற்கிறது. கப்பலின் அடிப்பாகம் மணலுக்குள் நன்றாகச் சிக்கிக்கொண்டது!
விபத்துக்குள்ளான இந்த கப்பலை மீட்பது அவ்வளவு எளிதில்லையெனத் தெரிகிறது. இதுவரை எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. எனவே, கப்பலை மணலுக்குள்ளிருந்து மீட்க வேண்டுமென்றால், அதன் எடையைக் குறைத்தாக வேண்டிய கட்டாயம். ஏற்கனவே மீட்புப்பணிகள் தொடங்கப்பட்டுவிட்டாலும், எது சாத்தியமான முறை என்று ஆய்வுசெய்து துரிதப்படுத்த நிபுணர்கள் அங்கே விரைந்துள்ளனர்.
கப்பலிலிருந்து எரிபொருள் எடையைக் குறைப்பது, கன்டெய்னர்களை வெளியேற்றுவதன்மூலம் கப்பலின் எடையைக் குறைக்கும் யோசனையில் இருக்கிறார்கள். அப்படி எடையைக் குறைப்பதற்கே ஒரு வார காலமாகலாமென்று தெரிகிறது. அதன்பின்னர்தான் கப்பலை அசைக்கவே முடியும்போல் தெரிகிறது.
இந்நிலையில், சூயஸ் கால்வாயின் இருபுறமும், சவுதி, ரஷ்யா, ஓமன் மற்றும் அமெரிக்க நாடுகளைச்சேர்ந்த எண்ணெய்ப் போக்குவரத்துக்கப்பல்கள், அண்ணன் எப்போ போவான், பாதை எப்போ கிடைக்குமென்று அணிவகுத்து நிற்கின்றன. இந்த கப்பலை அண்ணன் என்று குறிப்பிட்டிருப்பது சரியானதே. ஏனென்றால், இந்த கால்வாயில் பயணிக்கும் கப்பல்களிலேயே அதிகபட்ச நீளமுடைய கப்பல்தான் தற்போது சிக்கியிருக்கும் எவர்கிரீன் கப்பல்! இதன்காரணமாக மிகப்பெரிய டிராஃபிக் ஜாம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. சிக்கியுள்ள கப்பலை மீட்பதற்கு நேரம் செல்லச்செல்ல உலகளாவிய வர்த்தகத்துக்கு அடிவிழத் தொடங்கும்.
அதன்காரணமாக விலைவாசி உயரக்கூடும். கிட்டத்தட்ட, ஒரு போர்ச்சூழலில் எப்படி உலக வர்த்தகம் பாதிக்கப்படுமோ, அத்தகைய நிலையை அந்த மணல் புயல் ஏற்படுத்தியுள்ளது! இப்போதைக்கு அந்த கப்பல் நிறுவனம், சிரமத்துக்கு வருந்துகிறோம் என்று தனது வருத்தத்தை மட்டும் தெரிவித்துள்ளது! ஆம்… இயற்கை என்றென்றும் நம்மைவிட வலிமையானது!
(முகநூல் பதிவு)