அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொலைத் தொடர்பு அமைப்புகள் அவற்றின் புதிய முயற்சிகளை சோதனை செய்து கொள்வதற்கு சிங்கப்பூரின் 5G கட்டமைப்புக்களை பயன்படுத்த முடியும் என்று தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழினுட்ப அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சான் ஃபிரான்சிஸ்கோ, சிலிக்கன் வௌி (Silicon Valley) ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்த அமைச்சர் ஈஸ்வரன், அங்குள்ள பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், புதிய நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைவர்களுடன் நேற்று (திங்கட்கிழமை) கலந்துரையாடிய போதே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது சிங்கப்பூரில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 5G கட்டமைப்பு பற்றி அமைச்சர் ஈஸ்வரன் அமெரிக்க நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளித்தார்.
சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள மைக்ரோசொப்ட் (Microsoft) நிறுவனத்துக்குச் சென்ற அமைச்சர் ஈஸ்வரன், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆசியாவில் உள்ள வாய்ப்புகளை எவ்வாறு நோக்குகின்றன என்பதைப் புரிந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
அதேவேளை, குறித்த நிறுவனங்களுடன் எவ்வாறு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்பதைத் தாங்கள் ஆராய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க நிறுவனங்கள் சிங்கப்பூர் கட்டமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் இருதரப்பும் பயனடையலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.