சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்துகை தினத்தைக் கொண்டாடுதல் மற்றும் சர்வதேச கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரத்தின் முதல் நாளான இன்று திங்கட்கிழமை திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தக்வா நகர் கடற்கரை சுத்தப்படுத்தல் நடவடிக்கை இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலில் நடைபெறும் இந்த கடற்கரை கடற்கரை சுத்தப்படுத்துதல் செயற்பாடானது மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்றைய தினம் இடம்பெற்ற இந்த செயற்பாட்டில், மூதூர் பிரதேச சபை, மூதூர் பிரதேச பாடசாலை மாணவர்கள் , கடற்படையினர் ஆகியொர் கலந்து கொண்டிருந்தனர்.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வடக்கு கிழக்கு மாகாண உதவி முகாமையாளர் ரி. ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்ற இந்த இன்றைய ஆரம்ப நாள் நிகழ்வில் சுத்தப்படுத்தலைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கடற்கரைகளை சுத்தமாக வைத்திருத்தலின் முக்கியத்துவங்கள் தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்திற்கான சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்துகை தினத்தைக் கொண்டாடுதல் மற்றும் சர்வதேச கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரத்தின் நிகழ்வுகளின் ஒழுங்கில் நாளையதினம் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பிரதேசத்திலும், 18ஆம் தேதி புதன்கிழமை கிண்ணியா மாஞ்சோலை பிரதேசத்திலும் 19ஆம் தேதி திருகோணமலை துறைமுகத்தை அண்டிய பிரதேசங்களிலும் 20ஆம் திகதி திருகோணமலை துறைமுக பிரதேசமும் இருபத்தோராம் தேதி கடற்கரையும் சுத்தப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.