புதிய அரசாங்கத்தில் தொடர்ந்தும் மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இதனை நாங்கள் தேர்தல் காலங்களில் தெளிவாக கூறிய போதும் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இரண்டு அந்தஸ்துள்ள அமைச்சரும் இரண்டு இராஜாங்க அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டிருந்தது. மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும் நானும் வடிவேல் சுரேஸ் ஆகிய இருவரும் இராஜாங்க அமைச்சர்களாகவும் செயற்பட்டு வந்துள்ளோம்.
ஆனால் இம்முறை மலையகத்திற்கு ஒரே ஒரு இராஜாங்க அமைச்சு பதவி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம்கள் சார்பாக பலர் அமைச்சரைவில் அங்கம் வகித்தார்கள் ஆனால் இம்முறை ஒருவர் மாத்திரமே அங்கம் வகிக்கின்றார். இதன் மூலம் சிறுபான்மை சமூகத்தை அதாவது முஸ்லிம் மக்களையும் மலையக மக்களையும் தொடர்ந்தும் இந்த அரசாங்கம் புறக்கனித்து வருவதை காண முடிகின்றது.
எனவே எதிர்காலத்தில் அனைத்து தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இல்லாவிட்டால் எமது இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.
மேலும் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற சீ.பி.ரட்ணாயக்கவுக்கும் வன ஜீவராசிகள் அமைச்சராகவே நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் மலையக மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.