பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றால் முள்ளிவாய்க்கால் வரை யுத்தத்தால் கொல்லப்பட்ட பொது மக்கள், இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோரை அஞ்சலிக்கும் வகையில் நினைவு சதுக்கம் அமைக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அத்துடன் அந்த நினைவு சதுக்கத்தில் அஞ்சலி செய்யும் பொது நினைவு நாள் ஒன்றும் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஈ.பி.டி.பி கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு “ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பு எமக்கு நம்பிகை அளித்திருக்கிறது” என்ற தலைப்பில் ஈ.பி.டி.பி கட்சி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான விளக்க குறிப்பு வழங்கப்பட்டிருந்தது.
அந்த விளக்க குறிப்பில் “கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றால் முள்ளிவாக்கால் வரை யுத்தத்தில் கொல்லப்பட்ட சகல மனித உயிர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் பொதுச் சதுக்கம் அமைக்கப்படும் என்று எழுதப்பட்டிருந்தது.
அதில் எழுதப்பட்டிருந்த சகல மனித உயிர்களும் என்ற செற்பதத்தில் மாவீரர்களும் உள்ளடக்கப்படுவார்களா? என்று அங்கிருந்த ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அந்த நினைவு சதுக்கம் யுத்தத்தால் கொல்லப்பட்ட இலங்கை நாட்டை சேர்ந்த அனைவருக்குமானதாக அமையும். அது தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்தரப்பில் இருந்த உயிரிழந்தவர்களுக்குமான சதுக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.