ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இரவு கொழும்பிலுள்ள கோட்டபாய ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் புதல்வியின் திருமண நிகழ்வு செப்டம்பர் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இதற்கான அழைப்பிதழை வழங்க அமைச்சர் ஹக்கீம் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்.
எனினும் அதே நாளில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண வைபவம் இடம்பெறவிருப்பதால் மறுவீட்டு அழைப்பிதழைப் பெற்றார் கோட்டாபய.
நீண்டநேரமாக அமைச்சர் ஹக்கீமும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவும் கலந்துரையாடியிருக்கின்றனர்.
ஏற்கனவே முஸ்லிம் கூட்டணியாக அவரை சந்திக்க முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் திட்டமிட்டிருந்த நிலையிலேயே இதற்கிடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.