கொங்கோ நாட்டில் ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது காணாமல் போன 50 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கொங்கோவில் போதுமான வீதி வசதிகள் இல்லாத காரணத்தால் பெரும்பாலான மக்கள் படகு போக்குவரத்தையே பிரதானமாக கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், ஹாசி என்ற இடத்திலிருந்து தலைநகர் கின்ஷாசா நோக்கி லுகேனே ஆற்றில் படகு ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.
அந்த படகு 77 பயணிகளோடு அதிக பாரமான சரக்குகளையும் ஏற்றி சென்றது.
இதன்பொது பாரம் தாங்காமல் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் வீழ்ந்து தத்தளித்தனர்.
இதையடுத்து ஆற்றின் வீழ்ந்த 16 பேர் நீச்சல் அடித்து கரையை அடைந்து தங்களின் உயிர்களைக் காத்துக் கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த மீட்பு குழுவினர் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்னர் தண்ணீரில் மூழ்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 50 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.