ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்கட்டும், அதன் பின்னர் நாம் முடிவெடுப்போம் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் இடம்பெற்ற இலங்கை தழிரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாம் அவரசப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டியதில்லை எனவும், முதலில் போட்டியிடும் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். யார், யார் போட்டியிடுகின்றனர் என்பதை ஆராய வேண்டும் எனவும் கூறினார்.
அத்துடன், அந்த வேட்பாளர்கள் தமது நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்க வேண்டும், அதன்பின்னர் வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய்ந்து மக்கள் நலன் சார்ந்து முடிவெடுக்க முடியும் என்று இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த கூட்டத்தின் போது தமிழ்மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் இரா.சம்பந்தன் அவர்கள் கரத்துக்களை தெரிவித்திருந்தார்.
“தமிழ் மக்களின் ஒற்றுமையின் காரணமாகவே இன்றைக்கு இலங்கையில் ஜனநாயகம் நிலவுகின்றது. நீதிமன்றம் சுயாதினமாக செயற்படுகின்றது. மக்களின் வாக்குறுதிக்கு அமைய நாம் எமது செயற்பாடுகளை பக்குவமாக செயற்படுத்துகின்றோம்.
எனவே மக்கள் ஒற்றுமையாக இருந்து உரிமையை வென்றெடுக்க முன்னெடுக்கும் எமது செயற்பாடுகளுக்கு ஆதரவு தர வேண்டும்.
நாம் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பல செயற்பாடுகளை முன்னெடுக்கும் போதும் அதனை பத்திரிகைகளுக்கு தெரிவிப்பதில்லை. அவ்வாறு கூறினால் ஆபத்து ஏற்படும். அவ்வாறு கூறினால் சிங்களப் பத்திரிகைகள் வரும், சிங்கள அரசியல்வாதிகள் அதைப் பேசுவார்கள். பிழைகள் ஏற்படும்.
இதேவேளை, இன்று மக்களின் காணிகளில் மூன்றில் இரண்டு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மிகுதிக் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதனை விடுவிக்க நாம் தொடர்ந்து செயற்படுகின்றோம்.
அதேபோல் காணாமல் போனவர்கள் விடயத்தில் நாம் மிகுந்த கரிசனையுடன் செயற்படுகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். அவர்கள் சம்பந்தமான உண்மையை சொல்ல வேண்டும்.
அத்துடன், காணாமல் போனோர் அலுவலகம் முன்னர் உருவாக்கப்பட்டது. இப்போது பரிகாரம் சம்பந்தமான அலுவலகம் உருவாக்கப்படவுள்ளது. இரண்டு அலுவலகமும் சேர்ந்து காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளுக்கு தமது ஆதரவை வழங்கவேண்டும்.
இதற்கான எமது செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அடுத்துவரும் வாரங்களில் நாமும் எமது செயற்பாடுகளை மும்முரமாக செய்யவுள்ளோம்.
அத்துடன், நாம் எமது கடமைகளிலிருந்து தவறவில்லை. எவருக்கும் நாம் முண்டுகொடுக்கவில்லை. எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.