வளரும் பிள்ளைகள் அடிக்கடி பாதிக்கப்படுவது பல் வலியால் தான். இதை போக்க கைவைத்தியமாக என்ன செய்யலாம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
வளர்ந்த பெரியவர்களாலேயே தாங்க முடியாத வலி பல் வலி. இலேசான வலியாக இருந்தாலும் அதன் தீவிரம் தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். பற்கள் இருக்கும் இடம் தாண்டி, நரம்புகளில் வீக்கம், முகம் முழுக்க வலி தாடையில் வலி என்று ஒவ்வொரு இடமாக பரவக்கூடும்.
இந்த நிலை சிறுவர்களுக்கு வந்தால் தாங்கொணா வலியை அனுபவிப்பார்கள். பெரும்பாலும் குழந்தைகள் அதிக அளவு சாக்லெட், ஐஸ்க்ரீம், இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிட்டு பல் சொத்தைக்கு ஆளாகிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அதிகம் அவஸ்தைப்படும் பிள்ளைகளுக்கு என்ன கைவைத்தியம் பலனளிக்கும் என்று பார்க்கலாமா?
கொய்யா இலைகள்
கொய்யா இலைகள் மருத்துவகுணங்களை கொண்டிருக்கிறது என்பது அறிவோம். கொய்யா இலைகள் தேநீர் போட்டு குடிப்பதால் இருமல், தொண்டை வலிக்கு நிவாரணம் கிடைக்கும். இந்த இலைகள் பல் வலி, ஈறு பிரச்சனைகள், வாய்ப்புண் தொண்டைப்புண் போன்றவற்றை சரிசெய்யகூடியது.
கொய்யா இளந்தளிர்களை நன்றாக கழுவி அப்படியே பற்களின் இடையில் மென்று சாப்பிட்டால் பல் வலி குறையக்கூடும். ஆனால் வளரும் பிள்ளைகள் கொய்யா இலைகளை மென்று சாப்பிட முடியாது. அதற்கு மாற்றாக கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து அந்த நீர் சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்கி இளஞ்சூடாக இருக்கும் போது குழந்தைகளை வாய் கொப்புளிக்க செய்தால் பல் வலி காணாமல் போகும்.