இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினம் நாளைய தினம் வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் அங்கு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் இடம்பெற்றுவருவதாகவும் தலைநகர் டெல்லியில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தலைநகர் டெல்லியிலுள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்காக உரையாற்றவுள்ளதுடன், சென்னையிலுள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்க இருக்கிறார்.
இவ்வாறான ஒரு நிலையில், தமிழகத்தில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சம் பொலிசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுடன், இவர்கள் அனைவரும் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, தலைநகர் சென்னையில் 15 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதாவது, காஷ்மீர் விவகாரத்தின் தாக்கம் எல்லா மாநிலங்களிலும் பரவியுள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
சுதந்திர தினத்திற்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால், முக்கிய இடங்களில் தேவையான அளவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை நகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நகரில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வகையில் தீவிர கண்காணிப்பில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
கோவில்கள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.