தமிழ் நாட்டில், டயர் வெடித்து நிலை தடுமாறிய கார் ஒன்று மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சோக சம்பவம் தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
புதுக்கோட்டையில் இருந்து திருச்சியை நோக்கி சிதம்பரம் என்பவர் ஓட்டிச் சென்ற கார், நார்த்தாமலை அருகே உள்ள திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அம்மாசத்திரம் என்ற பகுதியில் சென்றுக் கொண்டிருந்த பொழுது திடீரென காரின் டயர் வெடித்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய அந்த கார் சாலையின் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரண்டு கார்களும் நொறுங்கின. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் சிக்கிய இரண்டு கார்கள் மீதும், சாலையின் இருப்புறமும் சென்ற மேலும் ஐந்து கார்கள் அடுத்தடுத்து ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகினதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 2 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். படுகாயமடைந்த நான்கு குழந்தைகள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.