பெரும் பனி படர்ந்த நிலப்பரப்பை கொண்ட கிறீன்லாந்து, விற்பனைக்கு விடப்படவில்லை என்றும், அந்த நாட்டை அமெரிக்காவிடம் விற்பனை செய்வது நகைப்புக்குரிய விடயம் என்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெடெரிக்சன் (Mette Frederiksen) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் கிறீன்லாந்தை பணம் கொடுத்து கொள்வனவு செய்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்தமையை தொடர்ந்தே கிறீன்லாந்தை விற்பனை செய்வதற்கான எண்ணம் இல்லை என்று அதை நிர்வகிக்கும் டென்மார்க் பதில் வழங்கியிருந்தது.
இது தொடர்பில், கிறீன்லாந்து டென்மார்க்கின் பகுதி அல்ல என்றும், கிறீன்லாந்து கிறீன்லாந்துக்கு சொந்தமான தன்னாட்சி பகுதி என்றும் டென்மார்க் பிரதமர் ஃபிரெடெரிக்சன் தெரிவித்தார்.
இதேவேளை, கிறீன்லாந்து நிர்வாகம் சர்வதேச நாடுகளுடனான வர்த்தகத்தை வரவேற்கிறது, ஆனால் அதனை விற்பனை செய்வதற்கான நோக்கம் ஒருபோதும் இல்லை என்று கிறீன்லாந்து வெளியுறவு அமைச்சும் பதில் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கிறீன்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவிருக்கின்ற நிலையிலேயே தனது விருப்பத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.