மீரிகம பாந்துராகொட பிரதேசத்தில் கள்ளச்சாராயம் அருந்திய பதினொரு பேர் தற்போதைக்கு பலியாகியுள்ளனர்.
பாந்துராகொட பிரதேசத்தின் கள்ளச்சாராய உற்பத்தியாளர் ஒருவரிடம் கசிப்பு எனும் கள்ளச்சாராயத்தை அருந்திய பெருந்தொகையானோர் திடீர் சுகவீனமுற்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இன்றைய தினம் வரை அவர்களில் பதினொரு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருபது பேர் மருத்துவமனைகளில் தங்கியிருந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த வர்த்தகரிடம் கள்ளச்சாராயம் அருந்திய பலருக்கும் வாந்தி, பேதி, கண்களில் எரிச்சல், கண் பார்வை பறிபோதல் போன்ற ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகவே பெருந்தொகையானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே குறித்த கள்ளச்சாராயத்தை அருந்திய ஒருவர் வெற்று இடமொன்றில் வீழ்ந்து மரணித்திருந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்னொருவர் தனது வீட்டிற்குள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடற்கூறுகள் அரசாங்க ரசாயனப் பகுப்பாய்வாளரிடம் மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது.