ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள அத்தனை பங்காளிக் கட்சியினதும் ஆதரவு தனக்கு கிடைக்கும் என நம்புவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எனினும் அதற்காக அவர்களிடம் பேச்சுக்களை நடத்துவதற்கான தேவை எவையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டிக்கு இன்று வியாழக்கிழமை காலை விஜயம் செய்த அவர், மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைக் கூறினார்.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்றுவந்தால்தான் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சஜித்திடம் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்.
இந்த நிலையில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கொழும்பிலுள்ள இல்லத்தில் இன்று மாலை ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளதோடு இதில் அமைச்சர் சஜித்திற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்கிற முடிவும் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.