ஓய்வூதியம் பெறும் நபர்களின் கொடுப்பனவுகளைக் குறைக்க, அரசாங்கம் தயாராகி வருவதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஓய்வூதியக்காரர்களின் பணத்தை, அக்ரஹார காப்புறுதித் திட்டத்திற்கு மாற்றுதல் என்ற போர்வையில், அரசாங்கம் இவ்வாறு முறையற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை – நெதிகம்வில பகுதியில், நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு, ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர், ஓய்வு பெற்ற நபர்களில் 70 வயதிக்கு மேற்பட்டவர்களின் கொடுப்பனவில் இருந்து 600 ரூபாவையும், 70 வயதுக்கு குறைந்த நபர்களிடமிருந்து 400 ரூபாவினையும் குறைப்பதற்கு, அரசாங்கம் தயராகி வருவதாக எதிர்க் கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் குறித்த சுற்றறிக்கையொன்று கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த விடயம் குறித்து, ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஓய்வூதியம் பெறும் நபர்கள், ஓய்வூதியத் திணைக்களத்தை தொடர்பு கொண்டு, இந்தத் தீர்மானத்திற்கு எழுத்துமூலம் தமது எதிர்ப்பினை வெளியிட முடியும் எனவும், எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.