தமிழர்களுக்கு இடையில் காணப்படுகின்ற பிரிவினை காரணமாகவே, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணிக்கு தமிழர்களை இணைத்துக்கொள்ளவில்லை என அந்த செயலணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவிக்கின்றார்.
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என கூறிய அவர், தமிழர்கள் முதற்கட்டமாக இணைத்துக்கொள்ளப்படாமைக்கான காரணத்தையும் தெளிவூட்டினார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர்கள் கண்டி தமிழர்களை இணைத்துக்கொள்ள விருப்பம் கிடையாது என அவர் இதன்போது குறிப்பிட்டார்.
அதேபோன்று, இவர் ரோ அமைப்பைச் சேர்ந்தர், இவர் சி.ஐ.ஏ அமைப்பை சேர்ந்தவர் என வேறு சிலர், கருத்துக்களை வெளியிடுவார்கள் எனவும் அவர் கூறினார்.
ஒரு இனத்திற்குள்ளேயே ஒற்றுமை இல்லாத பின்னணியில், இவ்வாறான செயலணிக்கு நபர்களை தெரிவு செய்யும் போது மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
தமது மனதில் ஏனையோரை எப்போதும் பிரித்து பார்க்கவில்லை என கூறிய அவர், அனைவரும் ஒரு இனத்தவர்கள் என்றே தாம் அவதானிப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஒரு நாடு, ஒரு இனமாக இருப்போம என கலகொடஅத்தே ஞானசார தேரர் இந்த ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
“ஒரே நாடு ஒரே சட்டம்” மனம்திறந்தார் ஞானசார தேரர்
தமிழர், சிங்களம், முஸ்லிம்கள் என்பது முக்கியம் அல்லவெனவும், திறமையானவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவிக்கின்றார்.
ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் முதலாவது ஊடக சந்திப்பு, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (01) இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பிரிவினைவாதத்தை அடிப்படையாகக் கொண்டு பிரச்சினைகளை உருவாக்கும் நபர்களுக்கே இதனால் பிரச்சினை எழுந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
குறுகிய பிரவினைவாதத்திலிருந்து அப்பாற்பட்ட ஒரே இனமாக, ஒற்றுமையுடன் வாழ்கின்ற இனமொன்றே எதிர்காலத்திற்கு தேவை என அவர் குறிப்பிடுகின்றார்.
அரசியல் கட்சிகளினால் பிரிந்து, சிங்களம், தமிழ், முஸ்லிம் புலம்பெயர்ந்தோரினால் பிரிந்து வாழ்கின்ற அனைவரையும் ஒன்றிணைத்து, இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் வாழ்கின்ற சமூகமொன்று உருவாகுமானால் அது எவ்வளவு அழகாது என அவர் கேள்வி எழுப்புகின்றார்.
தாம் சட்ட வல்லுநர்கள் கிடையாது எனவும், சட்ட வல்லுநர்களின் பார்வைக்கு அப்பாற்பட்ட விதத்தில் இதனை பார்ப்பதற்காகவே தமக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
சுதந்திரத்திற்கு பின்னரான காலத்தில் நாட்டிற்கு ஏற்ற வகையிலான சட்டமொன்றை தமக்கு உருவாக்குவதற்கு முடியாது போயுள்ளதாகவும் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகின்றார்.