ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை அடுத்து இலங்கை செயற்பட்ட விதம் ஒட்டுமொத்த உலகுக்கே முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளதாக ஜப்பானின் விஷேட தூதுவர் யசுஷி அகாஷி தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் விஷேட தூதுவர் யசுஷி அகாஷி, மற்றும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விஷேட சந்திப்பின் ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால உறவு தொடர்பாகவும் இதனை எதிர்காலத்தில் பலப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கருத்து வெளியிட்ட யசுஷி அகாஷி, பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை மற்றும் இனங்களுக்கிடையிலான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட இலங்கை அரசாங்கம் செயற்பட்ட விதத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் இந்த செயற்பாடு, ஒட்டுமொத்த உலகிற்கும் சிறந்த படிப்பினையாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக யசுஷி அகாஷி கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.
உலக சமாதானத்தினை உறுதி செய்யும் செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான வலிமையும் தைரியமும் நீண்ட ஆயுளும் யசுஷி அகாஷிக்கு கிடைக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்தார்.
அதேநேரம், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையே பல ஒற்றுமைகள் காணப்படுவதுடன், பௌத்த தர்மம் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவினை உறுதிப்படுத்தும் விசேட அம்சமாகத் திகழ்வாதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பின்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எசெல வீரக்கோன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.