நீங்களே போட்டியிட்டு வெற்றி பெறுங்கள். என்னை விட்டு விடுங்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிற்கும் பங்காளிக்கட்சிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த சந்திப்பைத் தொடர்ந்து, அமைச்சர்களான மனோகணேசனும் திகாம்பரமும் பிரதமரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, “அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து, பிரதமராகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் நீங்களே தொடர்ந்து நீடிப்பதற்கு பங்காளிக் கட்சிகளான நாம் உத்தரவாதம் அளிக்கின்றோம்” என அவர்கள் இருவரும் கூறியுள்ளனர்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், நீங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து போட்டியிட்டு வெற்றியடையுங்கள். என்னை விட்டு விடுங்கள் என பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் இன்னும் தீர்மானம் ஏதும் எட்டப்படாமல் இழுத்தடிப்பு தொடர்கின்றது.
இந்நிலையில் பிரதமரின் இந்த கருத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியில் மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணையை முன்வைத்துள்ளமையானது ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு மேற்கொள்ளும் சதியென பொதுஜன பெரமுன உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.