ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச எத்தனை விகாரைகள், ஆலயங்கள் ஏறி இறங்கினாலும் அவர் செய்த பாவங்களுக்கு ஒருபோதும் மன்னிப்புக் கிடையாது. ஏதோவொரு விதத்தில் அவருக்குத் தண்டனை கிடைத்தே தீரும். என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அவர் பௌத்த விகாரைகள் மற்றும் இந்து ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இது தொடர்பில் ராஜித சேனாரத்ன மேலும் கூறியதாவது,
பெரிய குற்றச்சாட்டுக்களைத் சுமந்து நிற்கும் கோட்டாபயவை வெட்கம் இல்லாமல் ஜனாதிபதி வேட்பாளாராக மஹிந்த களமிறக்கியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட ராஜபக்ச குடும்பத்தில் எவருக்கும் தகுதியில்லை. அந்த முழுக்குடும்பம் மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சர்வாதிகார ஆட்சியில்தான் மேற்படிக் குற்றங்களை ராஜபக்ச குடும்பம் புரிந்துள்ளது.
எனவே, கடந்த தடவை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தது போல் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவரின் சகோதரர் கோட்டாபய ராஜபக்சவும் தோல்வியடைவார் என்பது உறுதி. வெற்றிவாகை சூடப்போகின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று விரைவில் அறிவிக்கப்படும் என்றார்