நாற்பது ஆண்டுகளாக இலங்கை அரசியலில் தீவிரமாக ஈடுபட்டவர்; முதலாளித்துவப் பொருளாதார முறையைப் புறந்தள்ளிவிட்டுத் தேசிய உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் தேசியப் பொருளாதார முறையை அமல்படுத்தி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றவர். அரசியல், பொருளாதார, வெளிநாட்டுக் கொள்கைகளுக்காகக் கடுமையான விமர்சனங் களையும் எதிர்கொண்டவர். சோஷலிசவாதி என்றும் சிங்கள வெறியர் என்றும் பலவிதமாக விமர்சிக்கப்பட்டவர்தான் உலகின் முதல் பெண் பிரதமரான ஸ்ரீமாவோ ரத்வதே டயஸ் பண்டாரநாயகே.
1916-ல் இலங்கையில் (அன்று சிலோன்) ரத்தினபுரி நகரில் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தார் ஸ்ரீமாவோ . 1940-ல் சாலமன் டயஸ் பண்டாராநாயகேவை மணந்த பின்னர், சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடத் தொடங்கினார். 1956-ல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாலமன் 1959-ல் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் போட்டியிட்டு, 20 ஜூலை 1960-ல் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றார் ஸ்ரீமாவோ. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் பெண் பிரதமர் எனவும் புகழ்பெற்றார்.
1980-ல் ஜெயவர்த்தனாவின் ஆட்சியின்போது ஊழல் குற்றச்சாட்டுக்களால் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, குடியுரிமையும் பறிக்கப்பட்டது. அதன்பின் ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை ஏற்கவும் தடை விதிக்கப்பட்டது. 2000-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் திகதி மரணம் அடைந்தார்.