நாட்டில் பயங்கரவாதத்தை முற்றாக அழித்தொளிக்கும் புதிய சட்ட சீர்த்திருத்தங்களை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்காத சிலர், மரண தண்டனையை துடைத்தெறிவதற்கான சட்டங்களை பாராளுமன்றத்தில் கொண்ட வருவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்காதிருப்பது அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் அல்லது தமது ஆட்சி அதிகாரத்திற்கு இந்த கடத்தல்காரர்களினால் பாதிப்பு ஏற்படும் என்று அறிந்திருப்பதாலாகும் எனத் தெரிவித்தார்.
இதனை அறிந்து கொண்டும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான இறுக்கமான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும், எந்த தடைகள் வந்தாலும் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அவர் கூறினார்.
இதன்போது , போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களை நீக்கும் நோக்குடன் எனக்கெதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் முன்வைத்து வருவது அரசியல்வாதிகளினால் பலம்பெற்றுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களே எனவும் எதிர்கால தலைமுறையினரை பாதுகாப்பதற்கு எனது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை” எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.