நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது கிரிக்கெட் விளையாட்டிற்கான வசதிகள் வடக்கு கிழக்கிற்கு இன்னமும் வழங்கப்படவில்லை என்று சர்வதேச அரங்கில் புகழ்பெற்ற துடுப்பாட்ட வீரரரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான மஹேல ஜயவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.
கொழும்பை மையப்படுத்தி வைத்திருக்கும் சிறிலங்கா கிரிக்கெட்டின் அதிகாரங்கள் மாகாண மட்டத்திற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு அனைத்து மாகாணங்களுக்கும் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டால், சிறந்த வீரர்களை வடக்கு கிழக்கில் இருந்தும் தேசிய அணியில் இணைத்துக்கொள்ள முடியும் என மஹேல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இன்டியன் பிரிமியர் லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக கிண்ணத்தை சுவீகரித்துவரும் மும்பை இந்தியன் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிவரும் மஹேல ஜயவர்தன, இலண்டன் நகரிலுள்ள ஹைட்பாக்கில் வைத்தே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “மாகாணங்களிலுள்ள வீரர்களை அடையாளம் காண்பதற்காக பயிற்றுவிப்பாளர்கள் இருக்கின்றனர். எனினும் வடக்கு கிழக்கில் இந்த நடைமுறை எந்தளவிற்கு முறையாக மேற்கொள்ளப்படுகின்றது என்று எனக்குத் தெரியவில்லை. அதேவேளை அவர்கள் எவ்வாறான போட்டிகளில் பங்குபற்றுகின்றார்கள் என்பது தொடர்பிலும் எனக்கு சரியான தகவல்கள் தெரியாது எனக் கூறியுள்ளார்.
குறிப்பாக அவர்களுக்கு இன்னமும் முதல்தர போட்டிகளில் விளையாடுவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே கருதுகின்றேன். வடக்கு கிழக்கில் பாடசாலைகளில் உள்ள கிறிக்கட் அணிகள் பாடசாலை மட்ட கிறிக்கட் போட்டிகளில் விளையாடுவதை நான் அறிவேன். அதற்கமைய சிறந்த வீரர்கள் இருந்தால் அவர்களை அடையாளம் கண்டு நாம் அவர்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்காககத்தான் வடக்கு கிழக்கிற்கும் நாம் முன்வைத்துள்ள செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நாம் கேட்கின்றோம். அதன் ஊடாக சிறந்த வீரர்களை அடையாளம்கண்டு தேசிய அணியை பலப்படுத்திக்கொள்ள முடியும் எனத் தெரிவித்த அவர், குறிப்பாக யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கு போதிய வசதிகள் இல்லை எனவும் யாழ்ப்பாணத்திலும் ஓரிரு பாடசாலைகளிலேயே வசதிகள் இருக்கின்றதாகவும், முதலில் சர்வதேச தரத்திலான வசதிகளை செய்துகொடுக்காவிட்டாலும், உடனடியாக முதல்தர போட்டிகளுக்கான வசதிகளையாவது வடக்கு கிழக்கிலுள்ள வீரர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.