கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி இரத்தினபுரிக்கு தேசிய பட்டியல் உறுப்புரிமையை வழங்க முன்வந்த போதிலும், அதனை தமிழ்முற்போக்கு கூட்டணி வேண்டாம் என நிராகரித்திருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.
இரத்தினபுரியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சு பதவியின் மீதுள்ள ஆசை காரணமாக, தமிழ் முற்போக்கு கூட்டணி, இரத்தினபுரி மாவட்டத்திற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அன்று தவறவிட்டதாகவும் அவர் குற்றஞ்சுமத்தினார்.
ஊடக சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இன்றைய தினம் இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்ய காரணம், மறைந்திருக்கும் ஒரு உண்மையை வெளிகொண்டு வருவதற்கு என முதலில் சொல்லி கொள்கின்றேன்.2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது,
இந்த தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த தமிழ் ஒருவர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசிய முன்னணிசார்பில் போட்டியிட்டார்.
அவருக்கு இரத்தினபுரி வாழ் மக்கள் சுமார் 30 ஆயிரம் வாக்குகளை வழங்கியிருந்தனர்.
அந்த வேட்பாளருக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி சரியான தலைமைத்துவத்தை வழங்கியிருந்தால், அவர் இன்று பாராளுமன்றத்திற்குள் அவர் சென்றிருப்பார்.
எமது தலைவர் ரணில் விக்ரமசிங்க, இரத்தினபுரிக்கு தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவருக்கான சந்தர்ப்பத்தை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு அன்று வழங்கினார்.
ஆனால், எமக்கு தேசிய பட்டியல் வேண்டாம். கெபினட் அமைச்சு பதவி வேண்டும் என மனோ கணேஷன் கூறினார். அதற்கு சாட்சி நான். மற்றுமொருசாட்சி இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் அசோக்குமார். இன்னும் பலர் இருக்கின்றனர்.
அன்று மனோ கணேஷன் இரத்தினபுரிக்கு தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியை வழங்கியிருக்க முடியும்.பதவி ஆசைக்காக கெபினட் அமைச்சு பதவியை தமிழ் முற்போக்கு கூட்டணி அன்று எடுத்தது.
இரத்தினபுரி மாவட்ட தமிழர்கள் மீது உண்மையான அன்பும் அக்கறையும் இருந்திருந்தால் அன்று மனோ கணேஷன், இரத்தினபுரிக்கு ஒரு சந்தர்ப்பத்தை
வழங்கியிருப்பார். அவருக்கு பதவி ஆசையே இருந்தது.
அந்த பதவி ஆசை. இரத்தினபுரி மக்களை,இன்று பாதாளத்திற்கு தள்ளிவிட்டது.
அதற்கான பொறுப்பை மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்க வேண்டும்.
நான் கூறும் இந்த சம்பவத்தை மனோ கணேஷன் நிச்சயம் மறுப்பு தெரிவிப்பார். அறிக்கை அரசியல் செய்யும் அவருக்கு மறுப்பு தெரிவிக்க மட்டுமே
தெரியும். ஆனால் மக்களுக்கு நன்மை செய்யும் வழிகளை அமைக்க அவருக்கு தெரியாது.
இரத்தினபுரிக்கான தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்காது போனமைக்கான பிரதான காரணம் தமிழ் முற்போக்கு கூட்டணியே.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களியுங்கள். நிச்சயம் இரத்தினபுரி தமிழர்களுக்கு பாதுகாவளனாகவும், உரிமைக்கான குரலாகவும் இருப்பேன்” என்றார்.