கிழக்கில் வேலைவாய்ப்புகள் வழங்கும்போது இன மத வேறுபாடின்றி சமமாகவே வழங்குவேன் என கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு வேலைவாய்ப்புக்கள் வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகை தந்த இளைஞர்-யுவதிகளிடமே அவர் இதனை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற வெற்றிடங்களை நிரப்பும் போது அனைவருக்கும் ஒரே விதத்தில் பாகுபாடின்றி நியமனங்களை வழங்க காத்திருப்பதாகவும், நிதி அமைச்சிலிருந்து அனுமதி கிடைத்தவுடன் மிக விரைவில் நியமனங்கள் வழங்க உள்ளதாகவும் தங்களது கல்வித் தகைமைகளுக்கு ஏற்ற விதத்தில் நியமனங்களை வழங்க உள்ளதாகவும் தாங்கள் தொழில் கேட்டு அங்குமிங்கும் அலைந்து திரிய வேண்டாம் எனவும் தொழில் இல்லாமல் இருப்பதினால் நீங்கள் கஷ்டப்படுவதை நான் நன்கறிந்தவன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொழில்களை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி திருகோணமலையிலிருந்து கொழும்பிற்கும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு- மட்டக்களப்பிலிருந்து மீண்டும் திருகோணமலைக்கும் சென்று அலைய வேண்டாம்.
உங்களுடைய தகுதிக்கேற்ற விதத்தில் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு நான் மிகவும் உறுதுணையாக இருப்பேன், ஆனாலும் கிழக்கு மாகாண சபையின் நிதி இல்லாமையினால் மத்திய அரசாங்கத்தின் உதவியை பெற வேண்டியுள்ளதாகவும் அங்கிருந்து நாம் அனுப்பியுள்ள வேலைவாய்ப்புகளுக்குறிய நிதியமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் மிக விரைவில் நியமனங்களை வழங்க உள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்தார்.