இந்திய விமானப்படையில் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அப்பாச்சி ஏ.ஹெச்64 ரகத்தை சேர்ந்த 8 ஹெலிக்கொப்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இன்று செவ்வாய்க்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இது குறித்து, இந்திய விமானப்படை மூத்த அதிகாரியொருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, “பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப் படைத் தளத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், இந்திய விமானப் படையில் 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இணைத்துக் கொள்ளப்பட இருக்கின்றன.
இந்த நிகழ்ச்சிக்கு விமானப் படை தலைமைத் தளபதி பி.எஸ்.தனோவா தலைமை வகிக்க உள்ளார். பல்திறன் கொண்ட இந்த ஹெலிகொப்டர்கள் ஊடாக இந்திய விமானப் படையின் தாக்கும் திறன் மேலும் அதிகரிக்கும் என நம்புகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.
22 அப்பாச்சி ஹெலிகொப்டர்களை வாங்குவதற்காக அமெரிக்க அரசு மற்றும் போயிங் நிறுவனத்துடன் கடந்த 2015 செப்டெம்பரில் இந்திய விமானப் படை பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துக்கொண்டது.
அதற்கமைய முதலில் 4 ஹெலிகொப்டர்கள் கடந்த ஜூலை 27ஆம் திகதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில் இரண்டாவது கட்டமாக, 8 அப்பாச்சி ஹெலிகொப்டர்கள் ஒப்படைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.