இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தமிழக வீரர் வி.பி.சந்திரசேகர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
57 வயதான வி.பி.சந்திரசேகர், சென்னை மயிலாப்பூர் விஸ்வேஷ்வரபுரத்தில் உள்ள தனது வீட்டிலேயே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு வியாழக்கிழமை மாலை சென்ற அவர், வெகு நேரம் ஆகியும் திரும்பி வராத காரணத்தால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் இரவு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு சந்திரசேகர் மின் விசிறியில் வேட்டியால் தூக்கிட்டு இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வி.பி.சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டு இருப்பார் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்திய அணிக்காக 1988ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை 7 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 88 ஓட்டங்;கள் எடுத்துள்ளதுடன், தமிழக அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் 81 போட்டிகள் விளையாடி, 4,999 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இதேவேளை, தமிழக அணிக்கு பயிற்சியாளராகவும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு மேலாளராகவும் பணியாற்றி உள்ளார்.
மேலும், தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்து வந்தார்.
இந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணி பிளே-ஒப் சுற்றை எட்டியது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை செய்துகொண்ட வி.பி.சந்திரசேகருக்கு சவுமியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கிரிக்கெட் வீரர்களிடமும் கிரிக்கெட் ஆர்வலர்களிடமும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவருக்கு பலரும் சமூகவலைதளத்தின் ஊடாக இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.