இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலியா அணி 251 ஓட்டங்களினால் அபாரவெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்ரேலியா அணி 1-0 எனும் அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.
பல கோடி இரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 1 ஆம் திகதி பர்மிங்ஹாம்- எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 284 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக ஸ்டீவ் சிமித் 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் இங்கிலாந்து சார்பாக ஸ்டூவர்ட் பிரோட் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 374 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக ரோரி பேர்ன்ஸ் 133 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள பந்துவீச்சில் அவுஸ்ரேலியா சார்பாக பாட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 90 ஓட்டங்கள் பின்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய அவுஸ்ரேலியா அணி 487 ஓட்டங்களைப்பெற்றபோது தனது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
அவ்வணி சார்பாக ஸ்டீவ் சிமித் 142 ஓட்டங்களையும் மத்தேயு வேட் 110 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து 398 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனால் அவுஸ்ரேலியா அணி 251 ஓட்டங்களினால் அபார வெற்றிபெற்றது.
அவுஸ்ரேலியா அணி சார்பாக பந்துவீச்சில் நாதன் லியோன் 6 விக்கெட்களை வீழ்த்தினார். இப்போட்டியின் ஆட்டநாயகனாக இரு இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் சிமித் தெரிவு செய்யப்பட்டார்.