டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடரை அதிகாரப்பூர்வமாக, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டே விளையாடப் பட்ட போதும், தற்போது ஒருநாள் மற்றும் ரி-20 கிரிக்கெட்டுகளால் டெஸ்ட் கிரிக்கெட்டின் மவுசு குறைந்துள்ளது.
கிரிக்கெட் இரசிகர்கள் குறுகிய போட்டிகளான 50 ஓவர்கள் மற்றும் 20 ஓவர்கள் கொண்ட போட்டிகளை விறும்புகின்றனர். இதற்கு நேரம் ஒரு காரணம் என்பதனையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.
எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டுகளை விரும்பும், இரசிகர்களும் வீரர்களும் தற்போதும் இருக்கின்றனர் என்பதனை வெளிப்படுத்தும் வகையில். அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுகள் அழிந்து வருவதாகவும் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்வதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி வந்தனர்.
இதனால், இரு நாடுகளுக்கு இடையில் நடத்தப்பட்டு வந்த டெஸ்ட் போட்டியின் முறையை மாற்றி ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் தொடரை போன்று நடத்த ஐ.சி.சி விரும்பியது.
இதற்கான நடைமுறைகள், விதிகள் அனைத்தையும் செய்து முடித்துக் கொண்டு தற்போது டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடரை அதிகாரப்பூர்வமாக, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதன்படி டெஸ்ட் போட்டிகள் விளையாடும் தரவரிசையில் உள்ள ஒன்பது அணிகள் இத்தொடரில் விளையாடவுள்ளன.
இதற்கமைய இத் தொடரில் விளையாட அவுஸ்ரேலியா, இலங்கை, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் அந்தஸ்து பெற்றுள்ளன.
இரண்டு ஆண்டுகள் நடைபெறும் இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர் வெளியூர் அடிப்படையில் ஆறு டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும்.
இதில் மூன்று தொடர்கள் உள்ளூரிலும், மீதமுள்ள மூன்று தொடர்கள் வெளியூரிலும் நடைபெறும்.
மொத்தமாக 27 டெஸ்ட் தொடர்கள் நடைபெறும். இதில் மொத்தமாக 71 டெஸ்ட் போட்டிகள் நடைபெறும்.
இறுதியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சம்பியனுக்கான இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
சம்பியனுக்கான இறுதிப் போட்டி இறுதிப் போட்டி, எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் முதல் தொடராக இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர், நாளை ஆரம்பமாகவுள்ளது. இவ்வாறு டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை நடத்துவதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை தூண்ட முடியும் என சர்வதேச கிரிக்கெட் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.