கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியில் ஆற்றில் குளித்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுப்பதற்காக பைக்கில் ரகசிய கேமரா பொருத்திய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஆற்றில் பெண்கள் குளிக்கும் படித்துறை அருகே கடந்த சிலதினங்களாக ஒரு பைக் நின்றுகொண்டிருப்பதும் அந்த பைக்குக்கு சற்றுத்தள்ளி ஒரு வாலிபர் நின்றுகொண்டிருப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. அந்த வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவரைப் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிவிட்டு, பைக்கை எடுத்துக்கொண்டு புறப்படுவதிலேயே குறியாக இருந்தார்.
அப்போது அவரது பைக்கின் கைப்பிடி பகுதியில் கறுப்பு நிறப் பெட்டி ஒன்று பொருத்தப்பட்டிருப்பதை பொதுமக்கள் கவனித்தனர். அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் வீடியோ ரெக்கார்டிங் செய்தபடி ஒரு ஸ்மார்ட் போன் இருந்தது. அதில் ஆற்றில் பெண்கள் குளிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள், உடனடியாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்குத் தகவல்கொடுத்தனர்.
போலீஸார் அந்த வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் செண்பகராமன்புதூரைச் சேர்ந்த வெங்கடேசன் (24) எனத் தெரியவந்தது. அவர் தோவாளை ஆற்றில் குளிக்கும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுப்பதற்காகத் திட்டம் போட்டிருந்ததும் தெரியவந்தது. அதற்காகக் கறுப்பு நிறப் பெட்டி ஒன்றைத் தயாரித்துள்ளார். ஸ்மார்ட் போனை வீடியோ மோடில் ஆன் செய்து பெட்டிக்குள் வைத்துவிட்டு, பைக்கைக் கரையில் பெண்கள் குளிக்கும் பகுதியில் வைத்துவிட்டுச் சென்றுவிடுவார்.
இதனால் யாருக்கும் சந்தேகம் வருவதற்கு வாய்ப்பில்லை. தொடர்ந்து இதுபோன்று படம்பிடித்துவந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரது மொபைல் போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பதைக் கண்டுபிடித்த ஆரல்வாய்மொழி போலீஸார் வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.