திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை இரவு 7.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டமையை தொடர்ந்து விபத்துக்குள்ளான கார் பொதுமக்களால் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது.
திருகோணமலை நகர் பகுதியில் இருந்து நிலாவெளி நோக்கி பயணித்த சொகுசு காரொன்று அலஸ்தோட்டம் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி மற்றும் துவிச்சக்கர வண்டியை மோதியதுடன், அருகில் நின்ற பெண்ணுடனும் மோதியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து காரணமாக குறித்த பெண் உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இந்த விபத்து தொடர்பாக கோபமடைந்த பிரதேச மக்கள், காருக்கு தீ வைத்து எரித்தமையால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ள உப்புவெளி பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.