15 வருடங்களுக்கு முன்னர், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை அலரிமாளிகையில் வைத்து, கொலை செய்வதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் இந்த திட்டம் வகுக்கப்பட்டிருந்ததுடன், அவுஸ்திரேலியாவிலுள்ள சிங்கள அமைப்பொன்று இது தொடர்பில் சரியான சந்தர்ப்பத்தில் தகவல் தெரிவித்திருந்ததை அடுத்து, அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிலுள்ள சிங்கள அமைப்பு, குறித்த சம்பவம் தொடர்பில் தகவல்களை தெரிவித்த நிலையில், அது தொடர்பில் தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தெளிவூட்டியதாக தென் மாகாண வர்த்தகரான அம்பலங்கொட லுனம் வெலிதிசி மில்ஸ் உரிமையாளர் நிஹால் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா காமினிஷ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ட்வ் குணசேகரவின் சகோதரரான நிஹால் குணசேகர இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை இலக்கு வைத்து, பித்தலை சந்தியில் விடுதலைப் புலிகள் குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தனர்.
அந்த சம்பவத்தை அடுத்து, ஓரிரு தினங்களில் அவுஸ்திரேலிய சிங்கள அமைப்பின் பிரதிநிதியொருவர், இரவு 12 மணிக்கு தனக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார் என அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை இலக்கு வைத்து, அலரிமாளிகைக்குள் குண்டுத் தாக்குதலை நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர்” என அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் தனக்கு தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரிமாளிகைக்கு வருகைத் தருகின்ற உயர் பொலிஸ் அதிகாரியொருவரின் ஊடாகவே இந்த தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மனைவியின் தங்கையை புலிகள் பிடித்துக்கொண்டுள்ளனர். மனைவின் தங்கைக்கு பாரிய நிதியை புலிகள் அமைப்பு வழங்கியுள்ளது. அதனூடாகவே இந்த தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தெளிவூட்டினோம். விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றும் தலைவரை நாம் காப்பாற்ற வேண்டும். உடனடியாக செயற்படுங்கள் என அவுஸ்திரேலியாவிலுள்ள நண்பர் தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர் பொலிஸ் அதிகாரியின் மனைவியின் தங்கையுடைய வங்கி கணக்கு விபரங்கள் தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு கூறும் வரை தனக்கு பொறுமையாக இருக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தான் தனது சகோதரராக ட்வ் குணசேகரவிற்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ அதிகாலை 5 மணிக்கு எழுந்து விடுவார் என கூறிய தனது சகோதரன், தான் அந்த சந்தர்ப்பத்தில் அவரது வீட்டிற்கு சென்று விடயத்தை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தான் அதிகாலை 5.15 அளவில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு இந்த விடயத்தை தெரிவிக்கும் போது, தனது சகோதரன் அங்கு சென்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர், மஹிந்த ராஜபக்ஸ மாலை தனக்கு தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தி, நிஹால் நீங்கள் கூறிய விடயம் 100 வீதம் சரியானது. நீங்கள் வழங்கிய தகவலினால் நாம் காப்பாற்றப்பட்டோம்” என தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அவுஸ்திரேலிய சிங்கள அமைப்பு அப்போது மிகவும் சிறப்பாக செயற்பட்டது என நிஹால் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.