நாட்டிலுள்ள சில அரசியல்வாதிகள் வடக்கு- கிழக்கு மக்களை தங்களது அரசியல் சுயலாபத்திற்காகவே இத்தனை வருடகாலமாக பயன்படுத்தி வந்தார்கள் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சுயகௌரவத்துடன் வாழ வைப்பதே பிரதான இலக்கு என்றும் இதனை தான் நிச்சயமாக நிறைவேற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “வடக்கு- கிழக்கு பகுதிகளில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இலட்சக்கணக்கில் இருக்கின்றதாகவும், இவர்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியிலும் சவால்களுக்கு இடையிலுமே வாழ்ந்துக்கொண்டிருக்கிறதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு என விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க தான் தீர்மானித்துள்ளதாகவும், வீடமைப்பு, சுகாதாரம், தொழில் என அனைத்தும் உள்ளடங்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் அமைந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் அனைவரும் சமமானவர்கள். எனினும், வடக்கிற்கு நாம் வரும்போது கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள் என்பன மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை அவதானிக்க முடிகிறதாகவும், இந்தக் குறை எல்லா பகுதிகளிலும் இருந்தாலும் வடக்கில் சற்று அதிகமாக இருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. அரசமைப்பில் அனைவரும் சமம் என்று கூறினாலும் இங்கு அனைத்து விடயங்களிலும் வித்தியாசங்களும், ஏற்ற இறக்கங்களும்தான் காணப்படுகின்றன என தெரிவித்த சஜித் பிரேமதாச, இதனை முதலில் அடியோடு மாற்றியமைக்க வேண்டும். இதனையும் நான் நிச்சயமாக செய்வேன் என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
வடக்கு- கிழக்கு மக்களை சில அரசியல்வாதிகள், தங்களது சுயலாப அரசியலுக்காகவே இத்தனை காலம் பயன்படுத்திக்கொண்டிருந்தனர்.
நானும் கீழ் மட்டத்திலிருந்து வந்தவன்தான். எனது தந்தையும் கீழ் மட்டத்திலிருந்துதான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
எனவே, வடக்கு- கிழக்கு மக்களின் துயரங்கள் தொடர்பாக எனக்கு யாரும் பாடம் கற்பிக்க தேவையில்லை. இம்முறை, இந்த மக்களை எந்தத் தரப்பும் ஏமாற்ற நாம் இடமளிக்கப்போவதில்லை.
இந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அபிவிருத்திப் புரட்சியை நாம் நிச்சயமாக ஏற்படுத்துவோம்.
30 வருட கால யுத்தத்தில் கஷ்டப்பட்ட இவர்களுக்கு சுயகௌரவத்தை ஏற்படுத்துவதே எனது பிரதான இலக்காகும் என்பதையும் இவ்வேளையில் நான் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்” என அவர் இதன் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.