தற்போதைய அரசாங்கத்திற்கு எதிர்வரும் தேர்தலில் சிறந்த பாடம் புகட்டவுள்ளதாகவும் தமது விடயத்தில் இந்த அரசாங்கமே கடும் பாகுபாடு காட்டுவதாக அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியம் கடும் விசனம் வெளியிட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஊடக சந்திப்பின் போதே இது தொடர்பிலான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்போது, “கடந்த அரசாங்கங்களில் பல இலட்சம் தொழில்வாய்ப்பு நியமனங்கள் வழங்கப்பட்ட போதும் எந்த அரசாங்கமும் உள்வாரி, வெளிவாரி என பாகுபாடு காட்டவில்லை.
இந்த அரசாங்கத்தில் வேற்றுமைகள் நிறைந்து காணப்படுகிறது. மிகவும் சிரமப்பட்டு படித்த எங்களை மன அழுத்தத்திற்குள்ளாக்கும் கருத்துக்களை அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிப்போர் நாடாளுமன்றத்தில் கூறிவருகிறார்கள். அத்துடன் பிரதமரின் அண்மைய நாடாளுமன்ற உரையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன எங்களின் விடயத்தில் பாராமுகமாக இருக்கிறார்கள்.
இந்த நாட்டு மக்கள் அதிருப்தியாக இருக்கும் இவ்வேளையில் எங்களின் நியமனங்களை விரைவாக வழங்காத பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களின்போது நாங்கள் சத்தியாக்கிரகம் இருக்கத் தயாராக உள்ளோம்.
ஆகவே எங்களின் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். பாகுபாடுகள் இல்லாமல் எல்லோரும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிகளாக ஏற்று நியமங்களை வழங்குமாறு இந்த அரசாங்கத்திடம் அழுத்தமாக வலியுறுத்துகின்றோம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.