தமிழ் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல, அபிவிருத்தி என்ற பெயரில் எங்களது காணிகள் பறிபோவதற்கு நாங்கள் அனுமதி வழங்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதில் கருத்து வெளியிடும் போதே சாணக்கியன் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
அபிவிருத்தியென மக்களிடம் தரப்படும் விடயங்கள் அனைத்தும் பரிசளிப்பதாக மக்களுக்கு வழங்கப்பட்டாலும், அவை மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிப் பணத்தின் மூலமே அரசாங்கம் மேற்கொள்கின்றது.
இந்த வேலைத்திட்டங்களை அரசாங்கமே மேற்கொள்கின்றது என நாங்கள் நினைக்க வேண்டிய தேவை இல்லை.
இது எங்களின் உரிமை. இதை நாங்கள் கேட்டெடுக்க வேண்டும். எங்களுக்கு உரிமையும், அபிவிருத்தியும் வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக உள்ளது.
அபிவிருத்தி என்ற பெயரில் எங்களது காணிகள் பறிபோவதற்கு நாங்கள் அனுமதி வழங்க முடியாது எனக் குறிப்பிட்டார்.