கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளிவர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யும் விடயம் இழுபறி நிலையில் இருந்து வந்த நிலையில்,
நாட்டின் பல பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் உட்பட முஸ்லிம் மற்றும் ஏனைய இன சகோதரர்களாலும் இதற்கெதிராக குரல் கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தமை யாவரும் அறிந்ததே.
இந்நிலையில் மிக நீண்டகால போராட்டத்துக்கு மத்தியில் இலங்கை அரசு ஜனாசா நல்லடக்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதியளித்தமையை இட்டு தான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இதற்கு அனுமதியளித்தமைக்காக, நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு முஸ்லிம் சமூகம் சார்பாக தனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.