கிரிக்கெட் விளையாட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் எப்பொழுதும் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார்கள். வேகப்பந்து வீச்சாளர்களின் மின்னல் வேகத்தில் வரும் பந்துகளை எதிர் கொள்ள பல நேரங்களில் பேட்ஸ்மேன்கள் திணறுவதை நாம் பார்த்திருப்போம். அதிலும் மிகவும் உயரமான பந்து வீச்சாளர்களை சொல்லவே வேண்டாம்.
இவர்களின் அதிக உயரம் மிகவும் வேகமாக பந்தை வீசும் உத்வேகத்தை கொடுக்கும். பொதுவாக கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களே மிகவும் உயரமாக இருப்பார்கள். அப்படி மிகவும் உயரமான 10 கிரிக்கெட் வீரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
10 . கேமரான் கஃபி (Cameron Cuffy)
வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த கேமரான் கஃபி 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர். 1994 மற்றும் 2002 ம் ஆண்டுக்கு இடையில் விளையாடிய வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் 15 டெஸ்ட் மற்றும் 41 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

9. சுலைமான் பென் (Sulieman Benn)
வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த சுலைமான் பென் 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர். இடது கை பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சாளர். 26 டெஸ்ட் மேட்சில் 486 ரன்களும் 87 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். விளையாடும் சமயங்களில் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

8. ஜேசன் ஹோல்டர் (Jason Holder)
இவரும் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த வீரர். வலது கை பேட்ஸ்மேனான இவர் வலது கை பாஸ்ட் பௌலர் மற்றும் சிறந்த ஆல் ரவுண்டர். இவர் 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர். இதுவரை 39 டெஸ்டில் 1887 ரன்களும் 101 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 109 ஒரு நாள் போட்டியில் 1780 ரன்களும் 132 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

7. கிறிஸ் ட்ரெம்லெட்(Chris Tremlett)
இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ் ட்ரெம்லெட் வலது கை பேட்ஸ்மேன் மற்றும் பாஸ்ட் பௌலர். இவர் 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர். 12 டெஸ்டில் விளையாடி 50 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். காயம் காரணமாக தொடர்ந்து இவரால் விளையாட முடியவில்லை.

6. ஸ்டீவன் ஃபின்(Steven Finn)
இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டீவன் ஃபின் 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர். 16 வயதில் தனது கவுண்டி கிளப்பில் அறிமுகமானார். இவர் வலதுகை பௌலர் மற்றும் பேட்ஸ்மேன். 36 டெஸ்ட் போட்டியில் 125 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 69 ஒருநாள் போட்டிகளில் 102 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

5. டாம் மூடி(Tom Moody)
ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாம் மூடி 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர். வலது கை பேட்ஸ்மேன் மற்றும் நடுத்தர வேக பந்து வீச்சாளர். 76 ஒருநாள் போட்டிகளில் 1211 ரன்கள் மற்றும் 52 விக்கட்டுகளையும் எடுத்துள்ளார். முதுகு வலியால் அவதிப்பட்டதால் தொடர்ந்து இவரால் விளையாட முடியவில்லை. இதற்கு அவரது உயரம் காரணமாக இருக்கலாம் என சொல்லப்பட்டது.

4. கர்ட்லி ஆம்ப்ரோஸ்(Curtly Ambrose)
மேற்கு இந்திய வீரரான கர்ட்லி ஆம்ப்ரோஸ் 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர். வலது கை வேகப்பந்து வீச்சாளராக இருந்து மேற்கு இந்திய தீவுகள் அணியை முன்னணி அணியாக வைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர். 98 டெஸ்ட் விளையாட்டில் 405 விக்கெட்டுகளையும் 176 ஒருநாள் போட்டிகளில் 225 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

3. புரூஸ் ரெய்ட் (Bruce Reid)
ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருந்த புரூஸ் ரெய்ட்- ன் உயரம் 6 அடி 8 அங்குலம். 27 டெஸ்ட் விளையாட்டில் 113 விக்கெட்டுகளையும் 61 ஒருநாள் போட்டிகளில் 63 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். மெலிந்த உடலமைப்பை கொண்டதால் அடிக்கடி காயங்கள் ஏற்பட்டு கிரிக்கெட் விளையாட்டிற்கு விரைவில் ஓய்வு கொடுத்தார்.

2. ஜோயல் கார்னர்(Joel Garner)
தி பிக் பேர்ட் என செல்ல பெயரால் அழைக்கப்படும் மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஜோயல் கார்னர் 6 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர். இவர் 58 டெஸ்ட் விளையாட்டில் 259 விக்கெட்டுகளையும் 98 ஒருநாள் போட்டிகளில் 146 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

1. முகமது இர்பான்(Mohammad Irfan)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது இர்பான் 7 அடி 1 அங்குலம் உயரம் கொண்டவர். 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். தற்பொழுது வரை கிரிக்கெட் உலகில் மிகவும் உயரமான விளையாட்டு வீரர் இவரே.
