இந்தியாவில் அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளதென மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
அசாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்யும் மழையால் பிரம்மப்புத்திரா உட்பட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அபாயகட்டத்தை எட்டியுள்ளது.
அத்துடன் மாநிலத்திலுள்ள 12 மாவட்டங்கள் முற்றிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
தேமாஜி, டாரங், பர்பேடா, பிஸ்வநாத், சோனிப்பூர், சிராங், காம்ரூப் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஒரு இலட்சத்து 65 ஆயிரம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.
பல பகுதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் புகையிரத சேவைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளதென தேசிய பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

